புதன், ஜூன் 10, 2015

காக்கா முட்டை





காக்கா முட்டை


புதுமுகங்கள் நடித்த படத்தின் காட்சிகளிடையே பிரபலமான ஒரு ஹீரோ தலை காட்டுகிறார்  எனும் போது,  திரையரங்கில் விசில் சத்தமும் கை தட்டலும் கேட்கும் என்பது  நாம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வு தான். படத்தில்  சிம்பு வரும் காட்சியில்  கிடைக்கும் கைதட்டல்களுக்கு நிகராக படத்தில் வரும் பல காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு  கை தட்டல் கிடைக்கிறது என்றால்  அது ஒரு மேஜிக் தானே. இந்த மேஜிக் நிகழ்ந்திருப்பது  விருதுகளை அள்ளியிருக்கும் காக்கா முட்டை திரைபடத்தில். இதை நிகழ்த்தியிருப்பவர் இந்த படத்தை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் மணிகண்டன். 




சிறு வயதில் அதுவும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த சிறார்களுக்கு ஏதேனும் ஒரு ஆசை இருக்கும். அது நிராசையாகி விடுவதும் இயல்பே.வாழ்வின் அடிமட்ட நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த பெரிய காக்கா முட்டை சின்ன காக்கா முட்டை என்ற பட்டபெயர்கள் கொண்ட 
 சிறுவர்கள்  இருவரின் ஆசை கனவு இதெல்லாம் ஒரு பீட்சா வாங்கி சாப்பிடுவது தான். கணவனை சிறையிலிருந்து வெளி கொணரும் கவலையிலும் ஏழ்மையிலும் தாய் அவர்களின்  ஆசையை நிராகரிக்க, பாட்டி அவர்களின் ஆசையை நிறைவேற்ற இயலாமையால் இருக்க, இதை அடைய சிறுவர்கள் முயற்சிக்கும் விதங்களும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதை அடைய விடாத வண்ணம் செய்வதும், அவர்களின் ஆசை நிராசையாகும் போது அதை பற்றி கவலை கொள்ளாத  சமூகம், அவர்களுக்கு நேர்ந்த அநியாயத்தை  வைத்தே பணமாக்க முயலும் அவலத்தை தோலுரித்து காட்டுகிறார் இயக்குனர். 



சிறுவர்கள் ரமேஷ்,விக்னேஷ் இருவரும்  இதில் நடித்திருக்கிறார்கள்  
என்றே சொல்ல முடியவில்லை.அவர்களின் உற்சாகம், கோபம், வறுமையை மீறி கண்களில் வெளிப்படும் நம்பிக்கை வெளிச்சம், அழுகை என்ற
 அவர்களின் பரிமாணங்கள் அசத்தல்.படம் முடிந்த பின்னும் நம் மன கண்ணில் இருவரும் ஓடியாடுகிறர்கள் என்றால் அது ஒன்றும் மிகையல்ல.

அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்  ஐஸ்வர்யா. அசல் குப்பத்து பெண்ணாக இரு பிள்ளைகளின் தாயாக குடுமப பாரத்தை சுமக்கும் கதாபாத்திரம்.
 பிள்ளைகளை  அதட்டி கொண்டே அவர்களின் குறும்பை ரசிக்கும் விதம் அழகு.  உன் பிள்ளைகளை அடிச்சிட்டாங்க என்று  பெண் சொல்ல  "ரொம்ப அடிச்சிட்டாங்களா" என்ற படி இயலாமை  முகத்தில் மின்ன கண்களில் கண்ணீருடன்  அவர்  கேட்கும் இடம் ஒரு உதாரணம். குட் வெரி குட் ஐஸ்வர்யா என்று சொல்ல வைத்து விடுகிறார்.

வசனங்களில் அப்ளாஸ் வாங்கும் இடங்களில் குறிப்பிட்டு சொல்லும் படியான ஒன்று. சிட்டி செண்டர் முன்பு  சிறுவர்கள் இருவரும் வந்து நிற்க,   உள்ளே விட மாட்டாங்களே. இங்க என்ன அவமானத்தை சந்திக்க போறாங்களோ தெரியலியே என்ற படி நாம் நகத்தை கடிக்க முயல, நம் எண்ணத்தை திரையில் சின்னவன் "சத்தியமா உள்ளே விட மாட்டாங்கடா  நம்மை" என்று அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் பார்த்த 
படி சொல்லும் போது   தியேட்டரில்   கை தட்டல் மயம் தான்.


அந்த சிறுவர்களின் பாட்டி அவர்களின் பீட்சா  ஆசை கண்டு வீட்டிலேயே 
நான் செய்து தருகிறேன் என்று பீட்ஸா வுக்கு  மெனக்கெட தோசை கல் திரையில் தெரிய ஆரம்பித்து பின்  அவர் செய்து முடிக்கும் வரை  திரையரங்கில் வரும் கை தட்டல் அந்த காட்சி முடியும் போது பாட்டி சொல்லும்  ஒரு சொல்லுக்கு இரு மடங்காகிறது. அந்த பாராட்டு வசனத்துக்கு மட்டுமல்ல பாட்டிக்கும் சேர்த்து தான்.





படத்தில் அவ்வப்போது  உலகின் நடப்பு வாழ்க்கையை பற்றி இடித்துரைக்கும் விதமாய் வசனங்களிலும் காட்சிகளிலும் அழகாக வெளிபட்டிருப்பது அசத்தல். "ரேசன்ல அரிசி இல்லையாம்  டிவி தான் கொடுத்தாங்க " 
(வசனம் )டிவி தொகுப்பாளினி கேமரா சகிதம் அந்த சிறுவர்களை பற்றி உலகுக்கே சொல்லி கொண்டிருக்க இதை ஏதும் அறியாமல் அவர்கள் வேடிக்கை பார்த்த படி கடந்து போகும் இடம் (காட்சி ).


 பணம் இல்லாதவர்கள் பாதிக்கபட்டால் அந்த பாதிப்பை,  பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சுற்றி வரும் உலகம் எப்படி தனக்கு சாதகமாக்கி கொண்டு பணம் சம்பாதிக்க  முயல்கிறது என்பதை பூசணிக்காய் உடைப்பது போன்று  போட்டு உடைத்திருக்கிறது காக்கா முட்டை.


இந்த படம் எந்தளவு  ரீச் ஆகியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். சொல்கிறேன் .வழக்கமாக என் அலுவலக  நண்பர்கள் புது படங்கள் வ வருகையில் படம் எப்படி இருக்கிறது என்பதை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு செல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை படம் நல்லாருக்காமே  சார் என்று ஆச்சரியத்தை எனக்கு சொல்கிறார்கள். 

சிறுவர்கள் இருவரும் எந்த பீட்சாவை  சாப்பிட ஆசைபட்டார்களோ அது மிகுந்த மரியாதையுடன் அவர்கள் எதிரே வைக்கப்பட அதை அவர்கள் இருவரும் ஆசையாக சாப்பிட வாய் திறக்கையில் நம் தொண்டைக்குள் 
ஏதோ ஒரு பரவசம் வந்து அடைத்து கொண்டது போல் ஒரு பீலிங் ஏற்படுகிறது பாருங்கள். அந்த பரவச உணர்வு தான் இப் படத்தின் வெற்றி.



தமிழ் திரையுலகில் தொடர வேண்டும், இத்தகைய படங்களுக்கான முயற்சிகளும் அந்த முயற்சிகளுக்கான வெற்றியும். 


ஆர்.வி.சரவணன் 


7 கருத்துகள்:

  1. எல்லாத் தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது இந்தப் படம். எங்கள் வீட்டில் சினிமாவுக்கே போகாத நால்வர் இந்தப் படத்தைப் பார்த்து வந்திருக்கிறார்கள்! விகடன் 60 மதிப்பெண் கொடுத்திருக்கிறது. பாராட்டுகள் படக் குழுவினருக்கு.

    பதிலளிநீக்கு
  2. ஒரு நல்ல படம் வெளிவந்ததற்கு மகிழ்ச்சி.இது போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நல்ல விமர்சனம்

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு விமர்சனம்! படம் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  4. பார்க்கவில்லை எல்லோரும் மிக நல்ல விமர்சனம் கொடுத்திருக்கின்றார்கள் சார். பார்க்க வேண்டும். இது போன்ற படங்களுக்கு நம் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்....அப்போதுதான் திரைப்படத் துறை இன்னும் மெருகேரும்..

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு விமர்சனம் அண்ணா...
    படம் பார்க்க வேணும்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்