புதன், ஜூன் 24, 2015

திருச்செந்தூரின் கடலோரத்தில்.... 2




  திருச்செந்தூரின் கடலோரத்தில்.... 2

நான் என்ன தான் கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் எனக்குள்ளும் அவ்வபோது பகுத்தறிவு எட்டி பார்த்து என் முன் கேள்விகளை அடுக்கும். அதற்கு விடை தேடி மனது ஆராய முற்படும். அதை பற்றி பின்னே சொல்கிறேன். நீங்கள் இப்போது கேட்க போகும்  கேள்விக்கு வருவோம்.


திருச்செந்தூர் போறதுக்கு நீ, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தான் சென்னையிலிருந்து போகுதே அதுலயே போக வேண்டியது தானே பல்லவன் ல எதுக்கு  ஏறினே அப்படின்னு உங்களுக்கு கேக்க தோணுமே . இதை தான் ரயிலில் ஒருத்தரும் கேட்டார் அவரிடம் சொன்ன பதிலையே  உங்களுக்கும் இங்கே காப்பி பேஸ்ட் பண்ணிடறேன். அதாவது திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 4 மணிக்கு சென்னையில் கிளம்பி மறுநாள் சென்று சேரும் நேரம் காலை 7 மணி என்று நினைக்கிறேன். மேலும் தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி அவ்வளவு நேரம் செல்வதற்கு பதில் திருச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் மாறி மாறி சென்று விடலாம் என்பதால் தான் .

 திருச்சி சென்று இறங்கிய போது இரவு 9 மணி . பாதி தூரம் வரை வந்து விட்டோம் எனபதே மனதுக்கு மிக உற்சாகமாய் இருந்தது. அதை அதிகபடுத்தியது திருச்சி நகரம்.காரணம்  எனக்கு சிறு வயதிலிருந்து இந்த ஊரை  ரொம்ப பிடிக்கும் .ஆனால் நிறைய நேரம் அங்கே இருக்க பிரியபடுவேன். ஆனால் இயந்திர லைப் அதை எப்போதும் அனுமதிப்பதே இல்லை.  மிஞ்சி போனால் அரை மணி நேரம் மட்டும் பஸ் டு பஸ் மாறும் நேரத்தில் தான் அங்கிருக்க நேரிடும்.திருச்சி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலில் சென்று  இட்லி சாப்பிட்டு விட்டு திருசெந்தும் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு வந்த போது  ஒரு திருச்செந்தூர்  பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்பாடா கிடைச்சிடுசுடா என்ற படி கூட்டத்துடன் நானும் சென்று உற்சாகமாய் ஏறிய போது எல்லாம் ரிசர்வ் ஆகிடுச்சு கடைசி சீட் மட்டும் தான் இருக்கு என்றார் நடத்துனர். ஏறிய அனைவரும் ஏமாற்றத்துடன் இறங்கினோம். இருந்தும் நான் அசரவில்லை. மதுரை போய் அங்கிருந்து வேறு பேருந்தில் சென்று விடலாம் என்று மதுரை பேருந்தில் ஏறினால் அங்கும் இதே நிலை

ஒரு பஸ் என்றால் பரவாயில்லை எல்லா பஸ்ஸும்  இப்படி இருந்தா  எப்படி என்று விவேக் போல் சலித்து கொண்டேன் மீண்டும் ஒருமுறை விடுமுறை நாளில் கிளம்பியதற்கு என்னை நானே திட்டி கொண்டேன்.கருணை என்பது எனக்கு எந்த  ரூபத்திலும் கிடைத்து விட கூடாது என்பதில் முருகன் மிக உறுதியாய் இருக்கிறார் போலிருக்கிறது என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டேன்.

இப்படியான நிலை தொடர்கையில்  ஒரு பேருந்து வரிசையில் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தது. நடத்துனர் மதுரை மதுரை என்று குரல் கொடுத்து கொண்டிருந்தார். உடனே அங்கு  தாவினேன் அங்கு சீட் முன் பக்கம் கிடைத்து விட அப்பாடா என்று பெருமூச்சு விட்ட போது குழப்பத்துக்கு அஸ்திவாரம் போடுவது போல்  திருச்செந்தூர் போர்டுடன் ஒரு பேருந்து வந்து நின்றது.அதை பார்த்தவுடன் சிலர் நான் அமர்ந்திருந்த பேருந்தில் இருந்து இறங்கி சென்று ஏறினர். ஒரு நடத்துனர் அதுக்குள்ளே ஏன் வண்டியை கொண்டு வந்தே என்று டிரைவரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார். 

நான் என்ன செய்வது என்று யோசித்தேன். சரி ஏறிட்டோம் இதுவே இருக்கட்டும் என்று முடிவெடுத்தேன். பேருந்தும் உடனே கிளம்பி விட்டது. மதுரை வந்து இறங்கிய போது நடு இரவு 12 மணி. அங்கு இருந்த கூட்டம் என்னை அதிகமாகவே மிரள வைத்தது. ஒவ்வொரு ஊருக்கும் செல்ல அந்தந்த பேருந்து நிற்கும் இடத்தில இருந்த கூட்டம் கண்டு மிரண்டு போய் நான் திருச்செந்தூர் பேருந்து நிற்கும் இடம் நோக்கி வந்த போது திருச்செந்தூர் போகும் பேருந்திலேயே  ஏறியிருக்கலாம் இல்லை இல்லை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்லயே  ஏறியிருக்கலாம் என்று நான் சிந்திக்க தொடங்க
என் என்ன ஓட்டத்தையே பக்கத்தில் நின்ற ஒருவரும் சொன்னார் அவர் திருச்சியில் இருந்து வருகிறாராம். திருச்செந்தூர் செல்ல மதுரை வந்து செல்லலாம் என்று இங்கு வந்ததாக சொன்னார்.எப்படியும் அவருக்கு
வயது 50க்குள் இருக்கும். 

திடீரென்று ஒரு பேருந்து வரவே எல்லோரும் அதை நோக்கி செல்ல நானும் ஓடினேன். எப்போதும் மற்றவர்கள் நம்மை விட புத்திசாலிகள் என்பது மீண்டும் ஒரு முறை எனக்கு நிரூபணம் ஆயிற்று.பலர் பேருந்து நிலைய கேட்டில் பஸ் வரும் போதே  ஏறி இடம் பிடித்திருந்தனர். நான் ஏறிய  போது பஸ் புல்லாகி இருந்தது. ஏமாற்றம் என்னை உந்தி தள்ள சலிப்பு முன்னே இழுக்க கீழே இறங்கும் வேளையில் தான்  அவரை கண்டேன்.

 பேருந்துக்காக என்னை போல் வெயிட் பண்ணிய  அந்த நபர் ஏறி இடம் பிடித்திருப்பது தெரிந்தது. நான் அவரிடம் சீட் ஏதேனும் இருக்குதா என்று தயக்கமாய் கேட்கவே  இருக்கு வாங்க என்று அழைத்தார். நான் சீட்டுக்காக அடிதடி நடத்தி கொண்டிருந்த மக்களிடையே ஊடுருவி பேருந்தின் மத்தியில் அமர்ந்திருந்த அவர் அருகே சென்றேன். அது மூன்று பேர் அமரும் சீட். அவருடன் அவரது உறவினர் பெண்ணும்  வந்திருந்தார். அவர்கள் இரண்டு பேரும் அமர்ந்த பின் முன்றாவதாக நான் அமர்ந்தேன்.பேருந்து கிளம்பியது.  சீட் தந்த  அந்த நண்பரிடம் திருச்செந்தூர் செல்கிறேன் மொட்டை போடுவதாக வேண்டுதல் என்று சொன்னவுடன் அவர் சில டிப்ஸ் தந்தார். எனக்கு அது மிக உபயோகமாக இருந்தது .பின் நான் கொஞ்சம் அசந்து போய் தூங்க ஆரம்பிக்கையில்  பேருந்து திருச்செந்துரை தொட்டு விட்டது. 

அதிகாலை 4.00 மணி .அந்த நண்பரிடம் விடை பெற்ற படி நான் இறங்கிய போது குளிர் காற்று சில்லென்று வந்து  மோதி என்னை வரவேற்றது.
எனக்கு இடமளித்த அவரை இந்த பயணத்தில் தொடர்ந்து சந்திக்க போகிறேன் என்பதை  அப்போது நான் அறிந்திருக்கவில்லை அதே போல் பயண முடிவில் முருகன் எனக்கு உணர்த்த போகும் ஒரு உணர்வையும் நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

அடுத்த பதிவில் முருகன் தரிசனத்துடன் முடித்து விடுகிறேன் 
நாளை வரை பொறுத்திருங்கள் 

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 


9 கருத்துகள்:

  1. நல்ல அனுபவம். பேருந்து பயணங்களும் பல சமயங்களில் நமக்கு படிப்பினை தருபவை...... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல அனுபவம்தான்! இந்த முறை நான் கரூர் சென்றபோதும் பேருந்து உடனே கிடைக்காமல் அவதிப்பட்டேன்! என்னமோ தெரியவில்லை! திருச்சி நகரம் எனக்கும் பிடித்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் தமிழ் மணத்தில் இல்லையா? ஆச்சர்யமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  4. உங்களால் திருச்செந்தூர் பயணம் செல்ல எங்களுக்கு வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆவலாய் இருக்கிறோம் அண்ணா...
    நானும் திருச்செந்தூர் முருகனைத் தரிசித்துவிட்டு வந்தேன்...

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமான அனுபவம் தான்...பயணங்களில் சில சமயம் வேதனைகள் நிறைந்திருக்கும் ஆனால் அவை புகட்டும் பாடங்கள் மிகவும் மதிப்புள்ளதாக இருக்கும் நம் வாழ்க்கையையே கூட புரட்டிப் போடும் அளவிற்கு....

    ( கீதா: //நான் என்ன தான் கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் எனக்குள்ளும் அவ்வபோது பகுத்தறிவு எட்டி பார்த்து என் முன் கேள்விகளை அடுக்கும். அதற்கு விடை தேடி மனது ஆராய முற்படும். // சரியாகச் சொன்னீர்கள் சார்.....இது அவ்வப்போது எனக்கும் தோன்றும்...இறைவனின் விடை கிடைக்கும் வரை மனது கன்வின்ஸ் ஆகாது....ஏன் இப்படி நடக்கின்றது என்ற கேள்விகள் மனதைத் துளைக்கும்...பின்னர் இருக்கவே இருக்கு..."எல்லாம் அவன் செயல்" என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொள்வது...)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்