சனி, நவம்பர் 02, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்







கனவு மெய்ப்பட வேண்டும்

எனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நிறைய எழுதுவேன். படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த
அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் இருந்துச்சு. (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )

அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள்  தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள்.அந்த வருடம் என்னிடம் வந்து "நீ நாடகத்தை திருத்தி எழுதி தா" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை கொடுத்தார்கள். நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன். 13 காட்சிகளில் நாடகம் கொஞ்சம் சாதரணமாக தான் இருந்தது . நான் "என்னப்பா இப்படிஎழுதியிருக்கீங்க" என்றேன் அவர்கள் "அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்"என்றனர். நான்  வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் "நாடகம் பெயர் போட்டு போஸ்டர் எல்லாம் ஒட்டியாச்சு மாற்ற முடியாது "என்றனர்.

சரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற அந்த தலைப்பிலேயே நாடகத்தை நான் உருவாக்கினேன். எந்த நேரத்தில் தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு. படிப்பதற்காக எழுந்த நேரத்தில், 40 காட்சிகளில் நாடகத்தை மூன்று நாட்களில் எழுதி முடித்து கொடுத்தேன். 

"ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று. அதனால் இயக்கம் என்ற இடத்தில் உன் பெயரை போடுகிறோம் அட்ஜஸ்ட் பண்ணிக்க" என்றனர். சரி என்று சொல்லி விட்டேன். போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை. ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் ஷர்ட் தான் போட்டு கொண்டு வருவேன் என்று அடம் பிடித்தான். இப்படி சொல்லி கொண்டே போகலாம் அப்போது நடந்த கலாட்டாக்களை.




ஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே 
பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (நடிக்கும் ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி. நாடகத்திற்கு கை தட்டல் நிறைய கிடைத்தது .ஒரு ஜனரஞ்சகமான சிம்பிள் நாடகம் தான் இருந்தும் ஆடியன்ஸ் காட்டிய ரெஸ்பான்ஸ் பார்த்து எனக்கே 
ஆச்சரியம்  

நாடகம் முடிந்தவுடன், எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லாமல் விட்டார்கள். அவர்களாகவே, "சாரி லிஸ்டில் பெயர் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்" என்றார்கள். நான் கொஞ்சம் அப்செட் ஆகினாலும் அதை வெளியில் காட்டாமல், மேடையை விட்டு இறங்கினேன். அப்போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் என்னை பார்த்தவுடன் (அவர் நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவர்) என்னிடம் வந்து  "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் இருக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லா இருந்துச்சு.உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது"என்றார். இந்த ஒரு பாராட்டு போதுமே என்ற சந்தோசத்தோடு வீடு வந்தேன்.

வீட்டில் ஏக ரகளை. படிப்பை விட்டுட்டு நாடகம் எப்படி போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ, நீ உருப்படாமல் தான் போக போறே என்ற வார்த்தைகளால் என் மனசு ரொம்பவே கஷ்டமாகிபோனது.(இப்போது நினைத்து பார்க்கும் போது அவர்கள் சொல்வதில் இருந்த நியாயம் புரிகிறது) 

வீட்டில் நான்  சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானத்திற்கு வந்து விடவே, நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்து விட்டேன். என் குடும்பத்தில் அனைவருக்கும் இதில் சந்தோஷம்.

ஆனால் எனக்கு என் திறமைகளை கண்டு வெளி உலகம் பாராட்டி உற்சாகப்படுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை அப்படி ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம்  இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது

FINAL PUNCH 

இந்த பதிவு நான் கல்லூரி காலங்களில்.... என்ற தலைப்பில்,
இணையம் வந்த புதிதில் எழுதியது. இயக்குனர் ஆக வேண்டும் என்ற என் கனவு  
நிறைவேறாத ஒன்றாகி விட்டதே என்ற ஏக்கத்துடன் 2010 ம் வருடம் எழுதிய பதிவு 
இது.ஆனால் இப்ப எடுத்து படிக்கிறப்ப கனவு நிஜமாகி விட கூடிய வாய்ப்பு இருப்பது 
போல் ஒரு நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.இதற்கு இணைய மேடையும், 
நண்பர்களின் ஊக்கமும் கூட ஒரு காரணம். அனைவருக்கும் நன்றி.

தித்திக்கும் இந்த தீபாவளி நன்னாள் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றென்றும் சந்தோஷம் நிறைந்திருக்க 
செய்யட்டும் 

படம் : எங்கள் வீட்டு வாசலில் வரைந்த கோலம் எனது கிளிக்கில்  


ஆர்.வி.சரவணன் 

7 கருத்துகள்:

  1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. //வந்து "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் இருக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லா இருந்துச்சு.உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது"//


    சுவாரஸ்யமான நாடகமாக 40 காட்சிகளில் எழுதிய "பெரிய வீடு" நாடகத்தை 20 காட்சிகளில் அமையும்படி சுவாரஸ்யமாகவோ, சாதாரணமாகவோ விரைவில் நமது 'குடந்தையூர்' தளத்தில் எதிர்பார்க்கலாமா?
    [ஆகா மாட்டிக்கிட்டீங்களா?]

    பதிலளிநீக்கு
  3. வீட்டில் நிச்சயதார்த்த விசேஷம்.. தாமதம் ஆகி விட்டது. எனினும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. தித்திக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

    உங்கள் வீட்டு வாசல் கோலம் என் க்விலிங் லிஸ்டில் இப்போ...:)

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நாடகத்தை வாசித்தபின் அது அவ்வளவு போதாது என்று தோன்றியது, அதே தலைப்பில் அந்த நாடகம் எழுதியது, அதுவும் 20 ஸீங்களுக்குப் பதிலாக 40 ஸீன்ஸ் எழுதி, பாராட்டுப் பெற்றது, இதெல்லாம் குடந்தையூர் சரவணன் என்னும் ஒரு டைரெக்டர் வருகிறார் என்று “ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று அறிவிப்பது போல் உள்ளது ஸார். அது கண்டிப்பாக ஒரு பெரிய வீடாகத்தான் இருக்கும். திரை உலகுக்குக் கிடைக்கவிருக்கும் அந்தப் பெரிய வீட்டைக் காண நாங்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்கள் கனவு மெய்ப்பட எங்கள் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சுவையான நினைவுகள்! இயக்குனராக பரிணமிக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இயக்குனர் ஆக வேண்டும் என்று சின்ன வயதினிலே நீங்கள் கொண்ட ஆசை அல்லது உங்கள் ஏக்கம் இன்னும் இருக்கிறது என்பதை இந்த பதிவு காட்டுகிறது.

    // நிறைவேறாத ஒன்றாகி விட்டதே என்ற ஏக்கத்துடன் 2010 ம் வருடம் எழுதிய பதிவு இது.ஆனால் இப்ப எடுத்து படிக்கிறப்ப கனவு நிஜமாகி விட கூடிய வாய்ப்பு இருப்பது போல் ஒரு நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.இதற்கு இணைய மேடையும், நண்பர்களின் ஊக்கமும் கூட ஒரு காரணம்.//

    உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும். வாழ்த்துக்கள்.!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்